இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு? ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லாததால் சிறிசேனா அதிரடி


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு? ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லாததால் சிறிசேனா அதிரடி
x
தினத்தந்தி 8 Nov 2018 12:00 AM GMT (Updated: 7 Nov 2018 8:20 PM GMT)

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா நள்ளிரவில் அதிரடியாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.

இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இப்போது நாடாளுமன்றம் 14–ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார். அந்த நாளில் ஓட்டெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்தான் பிரதமராக தொடர முடியும் என்ற நிலை உருவானது.

ஓட்டெடுப்பில் ராஜபக்சே தரப்பு வெற்றி பெற்று விடலாம் என நம்புகிறது. அந்த தரப்புக்கு 96 எம்.பி.க்களின் ஆதரவுதான் இருந்து வந்தது. எம்.பி.க்கள் கட்சி தாவலுக்காக குதிரை பேரங்கள் நடந்து வந்தன. இதற்காக ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி தர முன்வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மந்திரிசபையில் தொழிலாளர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை துணை மந்திரியாக இருந்து வந்த மனுஷா நாணயக்காரா திடீரென பதவி விலகினார். 

அவர் அந்த அணியில் இருந்து விலகி, ரனில் விக்ரம சிங்கேயின் கட்சிக்கு தாவினார்.

அதிபர் சிறிசேனா தனது தரப்புக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக பகிரங்கமாக அறிவித்த நிலையில், துணை மந்திரி மனுஷா நாணயக்காரா விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 

இது மட்டுமின்றி, 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. 

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை அதிபர் சிறிசேனா நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக ஏற்கனவே தீர்மானித்து விட்டதையும், அதில் இருந்து மாறப்போவதில்லை என்பதையும் சிறிசேனாவிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் ஒரு அறிக்கையும் வெளியிட்டனர். இது ராஜபக்சே அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது.

இப்படி தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதால் 14–ந் தேதி நாடாளுமன்றத்தை கூட்டி ராஜபக்சே தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவானது.

எனவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தி விடலாம் என அதிபர் சிறிசேனா முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பை அவர் நள்ளிரவில் வெளியிடுவார் எனவும் அந்த தகவல்கள் கூறின.

இது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் 19–வது அரசியல் சாசன திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது, அப்படி கலைத்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற வேண்டும். இப்படி இல்லாதபட்சத்தில் அதிபர், நாடாளுமன்றத்தை கலைத்தால் அதற்கு எதிராக கோர்ட்டுக்கு போக முடியும் எனவும் கூறப்படுகிறது. 

Next Story