தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு


தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 5:17 PM GMT (Updated: 4 Jan 2019 5:17 PM GMT)

தாய்லாந்தில், பபுக் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

பாங்காக்,

தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த பபுக் என பெயரிடப்பட்ட இந்த புயல், 75 கி.மீ  முதல் 95 கி.மீ. வேகத்துடன் இன்று கரையைக் கடந்தது.

இந்த 'பபுக்' புயல் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலால் சுற்றுலா பயணிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தாய்லாந்து நாட்டை மிரட்டி வரும் 'பபுக்' புயல் காரணமாக அந்நாட்டிலுள்ள தெற்கு கடற்கரை பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் கோஹ் சமூய், கோஹ் பான்கன், கோஹ் தாவ் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள், அப்பகுதியை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேலும் பபுக் புயல் தம்மராத் மாகாணத்திலுள்ள பாக் பனாங்க் மாவட்டத்தை தாக்க உள்ளதால், அப்பகுதியில் அனைத்து விமானங்களும், படகு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீவானது நகரத்தின் முக்கிய பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கிருந்து வெளியேறுவதற்கு அனைத்து விதமான போக்குவரத்து வசதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் 20,000 சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கோஹ் சமூய் பகுதியின் தலைமை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில், 'பபுக்' புயல் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் ஜனவரி 5-ம் தேதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  'பபுக்' புயல் ஜனவரி 6-ம் தேதி அந்தமான் தீவுகளை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு, வங்க கடலில் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால், மத்திய வங்க கடல் மற்றும் கிழக்கு பகுதிக்கும், அந்தமான் பகுதிக்கும், மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



Next Story