சீனாவில் காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு


சீனாவில் காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 April 2019 12:35 PM GMT (Updated: 2 April 2019 12:35 PM GMT)

சீனாவில் காட்டுத்தீயில் சிக்கிய தீயணைப்பு வீரர்களின் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

செங்டு,

சீனாவின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 3,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காற்று திசைமாறி வீசியதில் அவர்களில் 30 பேர் வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.  காணாமல் போன அவர்களை தேடும் பணியும் தொடர்ந்தது.  அவர்களை மீட்கும் பணிக்கு உதவியாக பேரிடர் மேலாண் அமைச்சகம் அனுப்பிய குழு ஒன்றும் அங்கு சென்றது.

இந்நிலையில் அதிகாரிகள், 2 தீயணைப்பு வீரர்களிடம் பேசியுள்ளனர்.  அவர்கள் 24 பேர் பலியான தகவலை உறுதிப்படுத்தினர்.  மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்தது.  இதில் மற்ற 6 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.  இதனால் காட்டுத்தீயில் சிக்கி பலியான தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி காட்டுத்தீயில் இருந்து தப்பித்த தீயணைப்பு வீரர் லாங் ஷெங் என்பவர் கூறும்பொழுது, எனது 18 வருட பணி அனுபவத்தில் இல்லாத வகையில் இந்த சம்பவம் இருந்தது.  அனைவரும் திகைக்கும்படி திடீரென, ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது.  யாரோ சிலர் பெரிய அளவிலான தீயை தூக்கி எறிந்தது போன்று அது இருந்தது என கூறியுள்ளார்.

இதில் தப்பித்த மற்றொரு வீரரான வாங் ஜின் கூறும்பொழுது, தீ மிக வேகமுடன் எங்களை நோக்கி வந்தது.  ஒரு சில வினாடிகளில் அங்கிருந்த மரங்கள் எரிந்து போயின என கூறியுள்ளார்.  காற்று திசைமாறி வீசியதில், தீயானது வெடித்து பரவியது.  இது மிக ஆபத்து நிறைந்தது.  மிக அரிய ஒன்று என மற்றொரு வீரரான ஜீ ஷியென் கூறினார்.

Next Story