அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விசாரணை அறிக்கை வெளியீடு


அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு   விசாரணை அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 19 April 2019 6:14 AM GMT (Updated: 19 April 2019 6:14 AM GMT)

அமெரிக்க தேர்தலில் ரஷ்யத் தலையீடு விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலாரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக கடந்த  இரண்டு ஆண்டுகளாக  ராபர்ட் முல்லர்  தலைமையில் பலகட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் பிரசாரக்குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு இருந்திருப்பதற்கான சாத்தியம் குறித்து இந்த அறிக்கையில் அலசப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்தது.

டிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரிய வந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தார். முன்னாள் ஆலோசகரான ஜார்ஜ் பாப்புடோபுலஸ் தனது ரஷ்ய போக்குவரத்து குறித்து எஃப்.பி.ஐ.யிடம் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார்.

இதுவரை டிரம்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கிற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

Next Story