ஜப்பானில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு : மன்னர் பதவியை துறந்தார் அகிடோ


ஜப்பானில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு : மன்னர் பதவியை துறந்தார் அகிடோ
x
தினத்தந்தி 1 May 2019 12:30 AM GMT (Updated: 2019-05-01T01:04:16+05:30)

ஜப்பான் மன்னர் அகிடோ நேற்று தனது பதவியை துறந்தார்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மன்னர்களுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. எனினும் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.

அந்நாட்டை பொறுத்தவரை மன்னராக இருக்கும் நபர், தனது மரணம் வரை மன்னராகவே இருப்பார். அவரை தொடர்ந்து, அவரது வாரிசு அரியணை ஏறுவார்.

ஆனால், ஜப்பானின் 125–வது மன்னரான அகிடோ, வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக மன்னர் பதவியை துறப்பதாக கடந்த 2016–ம் ஆண்டு அறிவித்தார்.

2019–ம் ஆண்டு ஏப்ரல் 30–ந் தேதி, மன்னர் அகிடோ முறைப்படி பதவி விலகுவார் என்றும், அதனை தொடர்ந்து அவரது மகன் நருகிடோ புதிய மன்னராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜப்பானில், ஒவ்வொரு மன்னரின் காலமும் ஒரு சகாப்தமாக வரையறுக்கப்படும். அந்த வகையில், அகிடோவின் காலம் ‘ஹெய்செய்’ என்று கூறப்பட்டது. வரப்போகும் நருகிடோவின் ஆட்சிக்காலம், ரெய்வா என்று அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்வா என்றால் ஜப்பானிய மொழியில், நல்லிணக்கம் என்று பொருள்.

இந்த நிலையில், மன்னர் அகிடோ தனது பதவியை துறக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. ஜப்பானில், 200 ஆண்டுகளில் பதவியை துறக்கும் முதல் மன்னர் இவர் ஆவார்.

முதலில் நேற்று காலை ஜப்பானின் அரச குடும்ப மூதாதையர்களுக்கு தான் பதவியில் இருந்து இறங்குவதை அறிவிக்கும் சடங்கில் மன்னர் அகிடோ பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு மத்திய டோக்கியோவில் உள்ள அரண்மனையில் பதவியை துறக்கும் விழா நடைபெற்றது.

இதில் இளவரசர் நருகிடோ, இளவரசி மசாகோ, பிரதமர் ஷின்ஜோ அபே உள்பட 300–க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது மன்னர் அகிடோ, தனது ஆட்சி காலத்தில் தனக்கு ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து, மன்னராக தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

தனது உரையில் அவர் ‘‘ஜப்பான் உள்பட உலகம் முழுவதற்கும் அமைதி மற்றும் வளம் வேண்டும். என்னை அடையாளமாக ஏற்றுக்கொண்டு எனக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன்’’ என குறிப்பிட்டார்.

மேலும், ‘‘அடுத்துவரக்கூடிய ‘ரெய்வா’ சகாப்தம் அமைதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன். இந்த உலகில் உள்ள மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக வேண்டி கொள்கிறேன்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு புனித வாள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை அகிடோ ஒப்படைத்தார். அத்துடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இளவரசர் நருகிடோ மன்னராக பொறுப்பு ஏற்கிறார்.


Next Story