டிமென்சியா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க ஜப்பான் அரசு திட்டம்


டிமென்சியா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க ஜப்பான் அரசு திட்டம்
x

டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி வியாதி 70 வயது கடந்த முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.  வருகிற 2030ம் ஆண்டிற்குள் மொத்த மக்கள் தொகையில் 6 முதல் 7 சதவீதம் அல்லது 70 முதல் 80 லட்சம் மக்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு மதிப்பிட்டு உள்ளது.

டிமென்சியாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் மற்றும் நினைவாற்றல் குறைந்து விடும்.  அவர்களது அன்றாட பணிகளை செய்வதற்கே சங்கடம் நிறைந்த சூழல் ஏற்பட்டு விடும்.  சிலர் தங்களது சொந்தங்களை மறந்து விடுவர்.  எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே அறியாதநிலை ஏற்பட்டு விடும்.

இதனால் இந்த வியாதியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது.  இதன்படி தடுப்பு நடவடிக்கைகளாக, குழு உடற்பயிற்சி பாடங்கள் மற்றும் கற்றல் வகுப்புகள் ஆகியவை உள்ளூர் சமூக மையங்களில் நடத்தப்படும்.  இவை முதியவர்கள் இந்த வியாதியை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் இருக்கும்.

இந்த வியாதியை தடுப்பதற்காக வர்த்தக அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளில் முதலீடு செய்யவும் முயற்சி மேற்கொள்வதுடன், இதனை பற்றி அதிக அளவில் மருத்துவ ஆய்வு மேற்கொள்வதற்கான வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

இதன் உதவியால் அடுத்த 6 வருட காலத்தில் 2025ம் ஆண்டிற்குள் அந்நாட்டில் டிமென்சியா பாதிப்பிற்கு ஆளான 70 வயது கடந்த நோயாளிகளின் விகிதத்தினை பெருமளவில் குறைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

Next Story