விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக பொய்ப்புகார்: தமிழ் பெண்ணுக்கு சிறை சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு


விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக பொய்ப்புகார்: தமிழ் பெண்ணுக்கு சிறை சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 May 2019 9:06 PM GMT (Updated: 15 May 2019 9:06 PM GMT)

பொய்ப்புகார் கொடுத்த தமிழ் பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள ரோசோர் நகரில் வசித்து வருபவர் இந்திய பெண் கலைசெல்வி முருகையன் (வயது 24). தமிழ்ப் பெண்ணான இவர் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி ரோசோர் நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக புகார் அளித்தார்.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கலைசெல்வி முருகையன் கூறியது உண்மை இல்லை என்றும், அவர் பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தவறான தகவலை கொடுத்ததாக கலைசெல்வி முருகையன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கலைசெல்வி முருகையன் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது, இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் தான் சிறை செல்ல விரும்பவில்லை என்றும், எனவே தன்னை மன்னித்துவிடும்படியும் கலைசெல்வி முருகையன், நீதிபதியிடம் கெஞ்சினார்.

எனினும் கலைசெல்வி முருகையன் கூறிய பொய்யால் குற்றம் செய்யாத 2 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை சுட்டுக்காட்டி அவருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

சிங்கப்பூர் சட்டப்படி கலைசெல்வி முருகையன் மீதான குற்றச்சாட்டுக்கு அவருக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையும், 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story