இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது


இலங்கை குண்டு வெடிப்பு;  பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது
x
தினத்தந்தி 2 July 2019 12:20 PM GMT (Updated: 2 July 2019 5:43 PM GMT)

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது 250 பேரை கொன்று குவித்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியதாக அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளரும், போலீஸ் தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கடந்த ஏப்ரல் மாதம் 21ந்தேதி உலகம் எங்கும் கொண்டாடிய நேரத்தில், இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.  இது இலங்கையை மட்டுமல்ல உலக நாடுகளையெல்லாம் உலுக்கியது.  இந்த தாக்குதல்களை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதை உளவு தகவல்கள் அடிப்படையில் இந்தியா எச்சரித்து, உஷார்படுத்தியும் கூட, அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும், போலீஸ் தலைவர் ஜெயசுந்தரவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வந்தது.

அவர்களை அதிபர் சிறிசேனா அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார்.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 3 உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமி‌ஷனையும் நியமித்தார்.

இந்த கமி‌ஷன் முன்பு பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும், போலீஸ் தலைவர் ஜெயசுந்தரவும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள் இந்தியா தெரிவித்த உளவு எச்சரிக்கை, மேல் மட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும் இவ்விருவரும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறி, மனித குலத்துக்கு எதிராக மிகப்பெரிய குற்றம் செய்த வகையில் முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி தற்போதைய போலீஸ் தலைவர் சந்தானா விக்ரம ரத்னேவுக்கு அட்டார்னி ஜெனரல் டப்புலா டி லிவேரா நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்புலனாய்வுத்துறை உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.  அதை தொடர்ந்து வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் அவர்கள் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் வைத்தும், போலீஸ் தலைவர் ஜெயசுந்தர போலீஸ் ஆஸ்பத்திரியிலும் வைத்து நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.  இது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story