வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு மரண தண்டனை


வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 3 July 2019 11:45 PM GMT (Updated: 3 July 2019 1:24 PM GMT)

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டாக்கா, 

வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஷேக் ஹசீனா பிரதமராக இருக்கிறார். இவர் கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் வங்காளதேச தேசிய கட்சியின் ஆட்சியின்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அப்போது ஆளும்கட்சிக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஷேக் ஹசீனா, 1994–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23–ந் தேதி பிரசாரத்துக்காக டாக்காவில் இருந்து பாப்னா மாவட்டத்துக்கு ரெயிலில் சென்றார்.

அந்த ரெயில், பாப்னா ரெயில் நிலையத்தை சென்றடைந்தபோது, வங்காளதேச தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஷேக் ஹசீனா இருந்த ரெயில் பெட்டியை சூறையாடினர். ஷேக் ஹசீனா மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் அவர் உயிர் தப்பினார்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக வங்காளதேச தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 52 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தது. வங்காளதேச தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் மிகவும் மந்தமாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை, 1996–ம் ஆண்டு அவாமி லீக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் சூடுபிடித்தது.

போலீஸ் தரப்பு விசாரணை முடிந்ததும் 52 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் பாப்னா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 52 பேரில் 47 பேர் மீது குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 25 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தாக்குதல் நடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story