உலக செய்திகள்

முதல் மாரத்தான் வீரர் + "||" + First marathoner

முதல் மாரத்தான் வீரர்

முதல் மாரத்தான் வீரர்
கி.மு. 490-ல், ஏதென்ஸ் நகருக்கு வடமேற்கே மாரத்தான் என்ற கிராமத்தில் வந்திறங்கிய பாரசீகப் படையைப் பந்தாடினர், கிரேக்க வீரர்கள்.
கிரேக்க வீரர்களுடன் ஒப்பிடும்போது பாரசீக வீரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்பதால், அது ஓர் அதிரடியான வெற்றி.

போரில் எஞ்சிய பாரசீகர்கள், உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் கப்பல்களில் ஏறித் தப்பியோடினர்.

ஆனாலும் பாரசீகப் படையினர் திரும்பிவந்து தாக்கக்கூடும் என்று கிரேக்கப் படைவீரர்கள் நினைத்தனர். அது குறித்து எச்சரிப்பதற்காகவும், தாம் வெற்றி பெற்ற செய்தியைத் தெரிவிப்பதற்காகவும் பிடிபிடஸ் என்ற வீரனை ஏதென்ஸ் நகருக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.

போரில் சண்டையிட்டுக் களைத்திருந்தாலும், மலைப்புறப் பகுதியில் காற்றைப் போல் ஏதென்ஸ் நோக்கி ஓடினான் பிடிபிடஸ்.

மூச்சிரைக்க ஓடி ஏதென்சை எட்டிய அவன், ‘‘உங்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி... நாம் வென்றுவிட்டோம்!’’ என்று அறிவித்துவிட்டுத் தரையில் விழுந்து மடிந்தான்.

இந்தக் கதை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள். அந்த வீரன் ஏன் ஓடிப்போய் தகவல் சொல்ல வேண்டும்? அக்காலத்தில் குதிரைகளுக்குப் பஞ்சமில்லையே? அவன் ஒரு குதிரையில் சென்றிருக்கலாமே? என்று அவர்கள் கேட்கின்றனர்.

இந்தக் கதையை ஆதரிப்பவர்களோ, மலைப்பகுதியில் குதிரையைச் செலுத்துவது கடினம் என்பதால், அவன் ஓடிச் சென்றிருக்கலாம் என்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், இன்றைக்குப் பிரபலமாக உள்ள மாரத்தான் ஓட்டத்துக்கு வித்திட்டது இக்கதைதான்.

நவீன ஒலிம்பிக் போட்டியைத் தோற்றுவித்த பரோன் கோபர்தீனும் அவர் சார்ந்தோரும், 1896-ல் ஏதென்சில் தாங்கள் நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டத்தையும் ஒரு பந்தயமாக நிகழ்த்த முடிவுசெய்தனர்.

அதன்படி, ‘மாரத்தான் பாலம்’ தொடங்கி ஏதென்ஸ் நகர மைதானம் வரை முதல் ஒலிம்பிக் மாரத்தான் பந்தயம் நிகழ்ந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம், 40 கி.மீ.

அந்தப் பந்தயத்தில் வென்றவர், கிரீஸ் தபால் ஊழியரான ஸ்பைரிடான் லூயிஸ். அவர், 2 மணி 58 நிமிடங்களில் பந்தய தூரத்தை ஓடி முடித்தார்.

அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், மாரத்தான் ஓட்ட தூரம் மாறிக்கொண்டே இருந்தது. அந்நிலையில், 1924-ம் ஆண்டில்தான் ஒலிம்பிக் மாரத்தான் பந்தய தூரம் 42.195 கி.மீ. (26.2 மைல்) எனத் தீர்மானிக்கப்பட்டது.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலேயே பெண்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயம் அறிமுகம் செய்யப்பட்டது.