அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி


அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி
x
தினத்தந்தி 18 July 2019 10:02 AM GMT (Updated: 18 July 2019 7:54 PM GMT)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக அந்நாட்டு பிரதிநிதிகள் சபை வாக்களித்தது.

வாஷிங்டன்,

ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. அல் கிரீன் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது பிரதிநிதிகள் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் பதிவானதால் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது.

ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல்கள் இருந்தபோதும் ஜனநாயக கட்சியினரில் பெரும்பாலானோர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தனர். சபாநாயகர் நான்சி பெலோசியும், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கரும், சென்னையில் பிறந்தவருமான பிரமீளா ஜெயபாலும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இதற்கிடையில் தீர்மானம் தோல்வியில் முடிந்தது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.பி. அல் கிரீன், “என்னை பொறுத்தவரையில் இது தோல்வி இல்லை. ஏனெனில் கடந்த முறை இதே தீர்மானத்தை நான் முன்மொழிந்தபோது, தீர்மானத்துக்கு ஆதரவாக 66 வாக்குகளே கிடைத்தது. தற்போது 95 பேர் ஆதரவளித்து இருக்கிறார்கள்” என்றார்.


Next Story