அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்


அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 8:50 PM GMT)

அமெரிக்க அதிபரை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் பறந்தார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான ‘கத்தார் ஏர்வேசில்’ பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், ‘கார்பரேட்’ தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

இந்த பயணத்தில், பிரதமர் இம்ரான்கானுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, தலைமை ராணுவ தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ஆகியோர் பயணம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.


Next Story