ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல் - 63 பேர் உடல் சிதறி பலி


ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல் - 63 பேர் உடல் சிதறி பலி
x
தினத்தந்தி 18 Aug 2019 5:11 AM GMT (Updated: 18 Aug 2019 7:45 PM GMT)

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன.

இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவர அங்குள்ள அரசும், அமெரிக்க அரசும் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் காலூன்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் மேற்கு பகுதியில் உள்ள ஷர்-இ-துபாய் என்று அழைக்கப்படும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். ஆண் விருந்தினர்கள், பெண் விருந்தினர்கள் என தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

2 மாடிகளை கொண்ட திருமண மண்டபத்தின் கீழ் தளத்தில் மேடை அமைக்கப்பட்டு இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்ததது. அதன் அருகிலேயே உணவு பரிமாறப்பட்டது.

இசைக்கச்சேரியை கேட்டு ரசித்தபடியும், உணவை ருசித்து கொண்டும் விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தனர். அப்போது யாரும் எதிர் பாராத வகையில் திருமண மண்டபத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

குண்டு வெடிப்பில் சிக்கி பலர் உடல் சிதறி உயிர் இழந்தனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் சிதறி கிடந்தன. பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்தனர். இதனால் அந்த பகுதியே ரத்தக்களறியாக காட்சி அளித்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, திருமண மண்டபத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரதன் ரஹிமி கூறுகையில், “காபூல் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது மனித வெடிகுண்டு தாக்குதல் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 63 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 182 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும், பெண்களும் தான்” என்றார்.

படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மணமகன் மிர்வாயிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், “என் குடும்பம், என் மனைவி அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் பேசக்கூட முடியாது. என் மனைவி இன்னும் மயக்கத்திலேயே இருக்கிறார்” என்றார்.

மேலும் அவர் “நான் என் சகோதரனை இழந்தேன், நண்பர்களை இழந்தேன், உறவினர்களை இழந்தேன். இனி என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஒருபோதும் பார்க்க முடியாது” என கண்ணீர் மல்க கூறினார்.

இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது என கூறி கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் அஷ்ரப் கனி, தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத் கூறுகையில் “இதுபோன்றே மிருகத்தனமான கொலைகள் மற்றும் பெண்கள், குழந்தைகளை குறிவைப்பதில் எந்த நியாயமும் இல்லை” என கூறினார்.


Next Story