50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்


50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:41 PM GMT)

விறகு சேகரிக்க சென்றவருக்கு 50 வருடங்களுக்கு முன் எழுதிய வினோத கடிதம் கிடைத்தது.

நியூயார்க்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் ஒரு துண்டு காகிதம் இருந்தது.

இதையடுத்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என அறிந்துகொள்ளும் ஆவலுடன் பாட்டிலை திறந்தார். ஆனால் அதில் ரஷிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ரஷிய மொழி தெரியாது என்பதால் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார்.

“ரஷிய மொழி தெரிந்தவர்கள் யாராவது கடிதத்தில் இருப்பதை மொழி பெயர்த்து சொன்னால், நன்றாக இருக்கும்” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். டெய்லர் இவனோப்பின் இந்த பதிவு ‘பேஸ்புக்’கில் அதிகம் பகிரப்பட்டது. அதில் ஒருவர் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்து குறிப்பிட்டார்.

அந்த கடிதத்தில் “ரஷிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப்பவர்கள் “43, வி.ஆர்.எக்ஸ்.எப். சுலாக் விலாதிவோஸ்தோக்” என்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ என்பதும், வருடம் ஜூன் 20, 1969 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோவை கண்டுபிடித்து, அவரிடம் இந்த கடிதம் பற்றி கேட்டது. அப்போது அவர் “என்னுடைய 35 வயதில் இதை விளையாட்டாக செய்தேன். இந்த கடிதம் எதுவரை போகும் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அனுப்பினேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.


Next Story