ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீ - அமேசான் காடு பற்றி எரிகிறது - உலக நாடுகள் கவலை


ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீ - அமேசான் காடு பற்றி எரிகிறது - உலக நாடுகள் கவலை
x
தினத்தந்தி 23 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 4:44 AM GMT)

ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததால் அமேசான் காடு பற்றி எரிந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

பிரேசிலியா,

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் உலக அளவில் பிரபலமானவை. இங்கு உலகில் வேறு எங்கிலும் இல்லாத அரிய மரங்கள் காணப்படுவதோடு, அரிய வகை வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.

பூமியில் கிடைக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதம் அமேசான் காடுகளில் இருந்தே கிடைப்பதால் அந்த காடுகள் ‘பூமியின் நுரையீரல்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கை தான். ஜூலை-அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாகவே இங்கு காட்டுத்தீ உருவாகும்.

அதாவது மின்னல் தாக்கி மரங்களில் தீப்பிடித்து அதன் மூலம் காட்டுத்தீ பற்றி எரியும். அதே சமயம் மரம் வெட்டுபவர்கள் மற்றும் விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்வதற்காக காட்டுக்கு தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமேசான் காடுகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது இதுவரை இல்லாத வகையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் முன்னெப்போதும் நிகழாத வகையில் அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.

இதில் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்றும், பல லட்சம் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

2018-ம் ஆண்டின் தரவுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரித்து உள்ளது.

பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் சுமார் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 90 சதவீத காட்டுத்தீகள் இன்னும் அணையவில்லை என்றும், மேலும் நாளுக்கு நாள் புதிதாக காட்டுத்தீ ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ, சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பு, காடுகள் அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பாக அதிபர் போல்சனாரோ பதவியேற்றதில் இருந்து, அமேசான் காடுகள் விரைவான விகிதத்தில் இழப்பை சந்தித்ததாக காலநிலை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு அரசு சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மெக்ரான் அழைப்பு

அதுமட்டும் இன்றி சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காடுகள் பற்றியும் தீ குறித்தும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதிக்க அந்நாட்டின் அதிபர் மெக்ரான் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில், “நமது வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பூமியில் 20 சதவீத ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நுரையீரல் தீப்பிடித்து எரிகிறது. இது ஒரு சர்வதேச நெருக்கடி. ஜி-7 உச்சிமாநாட்டின் உறுப்பினர்கள், இந்த அவசரநிலை குறித்து விவாதிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகள் தலையிட வேண்டாம்

மெக்ரானின் இந்த கருத்துக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, அமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

மேலும் அவர் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பிரேசிலின் உள்நாட்டுப் பிரச்சினையை தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னதாக பிரேசிலில் உள்ள தன்னார்வ அமைப்புகள்தான் இந்த காட்டுத்தீக்கு காரணம் என போல்சனாரோ குற்றம் சாட்டியது நினைவு கூரத்தக்கது.


Next Story