அமெரிக்கா-தலீபான் ஒப்பந்தத்தில் 5,400 வீரர்கள் வாபஸ்


அமெரிக்கா-தலீபான் ஒப்பந்தத்தில் 5,400 வீரர்கள் வாபஸ்
x
தினத்தந்தி 3 Sep 2019 5:35 AM GMT (Updated: 3 Sep 2019 5:35 AM GMT)

அமெரிக்கா-தலீபான் ஒப்பந்தத்தில் 5,400 வீரர்கள் திரும்பப் பெறப்படுகின்றனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடந்து வரும் போரை முடிவுக்கு  கொண்டு வரும் வகையிலும், அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதற்காகவும் இந்த பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடந்து வருகிறது.  எனினும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

தலீபான் போராளிகளுடன் கொள்கையளவு  ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 5,400  படை  வீரர்களை  திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவித்து உள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஆப்கானிய தலைவர்களுக்கு விளக்கமளித்த பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் முதன்முறையாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்களை ஜல்மே கலீல்ஜாத் வெளியிட்டார்.

ஆனால் இறுதி ஒப்புதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். நேர்காணல் ஒளிபரப்பப்பட்டபோது ஒரு பெரிய குண்டுவெடிப்பு காபூலில் நடந்தது. இதில் 16 பேர் பலியாகி உள்ளனர். 119 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் தலீபான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தலீபானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகள், ஆப்கானிஸ்தானில் தினசரி வன்முறையையும், பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதலையும் முடிவுக்குக் கொண்டுவருமா என்ற அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

2001 அமெரிக்க படையெடுப்பிலிருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தலீபான்கள் அதிக நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதுவரை ஆப்கானிய அரசாங்கத்துடன் பேச மறுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்க கைப்பாவைகள் என்று கேலி செய்து வருகிறார்கள்.

டோலோ நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கலீல்ஜாத் கோடிட்டுக் காட்டிய ஒப்பந்தம் வளைகுடா மாநிலமான கட்டாரில் நடைபெற்ற ஒன்பது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகும் என கூறினார்.

Next Story