அமெரிக்காவில் நடுக்கடலில் படகில் தீப்பிடித்து 25 பேர் சாவு


அமெரிக்காவில் நடுக்கடலில் படகில் தீப்பிடித்து 25 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Sep 2019 11:15 PM GMT (Updated: 3 Sep 2019 5:26 PM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் சான்டாகுரூஸ் என்ற தீவு அமைந்துள்ளது.இங்குள்ள கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு அடியில் சென்று பவளப்பாறை மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்கும் ‘ஸ்கூபா டைவிங்’ மிகவும் பிரபலமானது.

வாஷிங்டன், 

‘ஸ்கூபா டைவிங்’கில் ஈடுபடுவதற்காக 39 பேர் கொண்ட குழு ஒன்று சான்டாகுரூஸ் தீவில் சுற்றியுள்ள கடல்பகுதிக்கு படகில் சென்றனர்.

இந்த படகு சன்டாகுரூஸ் தீவு அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து நேரிட்டது. கண்இமைக்கும் நேரத்தில் தீ படகு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 25 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். 5 பேர் மட்டும் கடலில் குதித்து உயிர் தப்பினர். மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. படகில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. 

Next Story