எங்கள் அணுஆயுத கொள்கையில் மாற்றம் இல்லை; இம்ரான்கான் கருத்துக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம்


எங்கள் அணுஆயுத கொள்கையில் மாற்றம் இல்லை; இம்ரான்கான் கருத்துக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம்
x
தினத்தந்தி 4 Sep 2019 12:30 AM GMT (Updated: 3 Sep 2019 7:49 PM GMT)

எங்கள் அணுஆயுத கொள்கையில் மாற்றம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் சீக்கியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய பிரதமர் இம்ரான் கான், “எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு போரில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர் உண்மையில் தோற்றவர்தான். ஏனென்றால் போர் மூலம் வேறு பிரச்சினைகள் முளைக்கின்றன. ஆகவே, இந்தியாவுக்கு எதிராக முதலில் நாங்களாக போர் தொடங்க மாட்டோம்” என்று கூறினார்.

“அணுஆயுதத்தை நாங்களாக முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்று பாகிஸ்தான் இதுவரை அறிவிக்காமல் இருந்தது. இம்ரான்கான் கருத்து மூலம், பாகிஸ்தானின் இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அதை மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-

இரு அணுஆயுத நாடுகளுக்கிடையிலான போர் குறித்த பாகிஸ்தான் அணுகுமுறை பற்றி பிரதமர் தெரிவித்த கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இரு அணுஆயுத நாடுகளிடையே மோதல் நடக்கக்கூடாது என்பது உண்மைதான். அதே சமயத்தில், எங்களது அணுஆயுத கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவை பொறுத்தவரை, அணுஆயுதத்தை தானாக முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதுதான் அதன் அணுஆயுத கொள்கையாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story