லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை


லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
x
தினத்தந்தி 4 Sep 2019 4:57 AM GMT (Updated: 4 Sep 2019 11:07 AM GMT)

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தி தூதரக வளாகத்தில் சேதம் ஏற்படுத்தினர்.

லண்டன்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன்,  மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை  ஆதரிக்கவில்லை.

இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள் விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.வும் ஏற்றுக்  கொண்டது.

காஷ்மீர் விவகாரத்திற்காக ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த  மாதம் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தான் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இதுகுறித்து ஜி 7 மாநாட்டின்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்தபோது பேசினார். அப்போது போரிஸ் ஜான்சன் இந்திய தூதரகத்திற்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி  அளித்தார்.

இந்த நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே  பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தூதரக வளாகத்தில்  சேதம் ஏற்பட்டது.

இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க உதவிய பர்மிங்காம் நகரைச் சேர்ந்த இனாம் உல் ஹக், காஷ்மீர் மாநிலத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் போராட்டக்காரர்கள் கோருவதாகக் கூறினார்.

இந்த போராட்டம் தொடர்பாக 2 பேரை கைது செய்து உள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.



Next Story