விமானிகள் வேலை நிறுத்தம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு


விமானிகள் வேலை நிறுத்தம்:  பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2019 6:10 AM GMT (Updated: 9 Sep 2019 6:10 AM GMT)

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன பைலட்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

லண்டன்,

உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விமான சேவை அளித்து வருகிறது. ஆனால், விமானங்களை இயக்கி செல்லும் விமானிகளுக்கு முறையே, ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஆண்டு விடுப்பு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமானிகள் தரப்பில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்தில் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து நிறுவனத்துக்கு தெரிவித்தும், நிறுவனம் செவிசாய்க்காததால், 3  நாட்கள் (செப்.9 ,10 மற்றும் 27 ஆகிய தேதிகளில்) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அண்மையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் நோட்டீஸ் கொடுத்தது.  

அதன்படி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நாளையும்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும்பாலான விமான சேவைகள் முடங்கியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தநிலையில், விமானிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ‘இது விமானிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை’ என தெரிவித்து இருந்தது.  இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 147 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1051 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது. 

Next Story