ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்


ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்
x
தினத்தந்தி 9 Sep 2019 8:10 AM GMT (Updated: 9 Sep 2019 8:10 AM GMT)

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார்.

நியூயார்க்,

நியூயார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு  பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 74வது அமர்வின் (யு.என்.ஜி.ஏ) பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, செப்டம்பர் 27-ந்தேதி காலையில் உயர்மட்ட அமர்வில் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி, 2014ல் ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுக்கு  மத்தியில் தனது முதல் உரையை  நிகழ்த்தி இருந்தார். மேலும் நியூயார்க்கில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

செப்டம்பரில் அவரது வருகை மற்றும் ஐ.நா.வில் உலகத் தலைவர்கள் மத்தியில்  உரையாற்றுவது, தேர்தலில் வெற்றிபெற்று  இரண்டாவது முறை பிரதமரான பிறகு  இது  முதல் முறையாகும்.

பேச்சாளர்களின் பட்டியலின் படி, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் செப்டம்பர் 27-ம் தேதி அன்று உலகளாவிய தலைவர்கள் மத்தியில்  உரையாற்றவுள்ளார். மோடியின் உரைக்கு  பின்னர் இம்ரான் கான் உரையாற்றுகிறார்.

பேச்சாளர்களின் பட்டியலில் சுமார் 112  நாட்டு தலைவர்கள் உள்ளனர். 48 நாட்டு தலைவர்களும் 30-க்கும் மேற்பட்ட வெளியுறவு துறை அமைச்சர்களும் ஐ.நா. பொதுச்சபையின் விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

யு.என்.ஜி.ஏ. அமர்வுக்காக நியூயார்க்கிற்கு வருவதற்கு முன்பு, மோடி ஹூஸ்டனுக்கு செல்கிறார். அங்கு அவர் செப்டம்பர் 22 அன்று இந்திய-அமெரிக்கர்களிடையே உரையாற்றுகிறார்.

இந்திய-அமெரிக்க சமூகத்தினர் நடத்தும்  “ஹவுடி, மோடி நிகழ்ச்சி  ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற டெக்சாஸ் இந்தியா மன்றத்தால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் செல்வாக்கு மிக்க அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது விவாதம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 வரை நடைபெறும். 

2017 ஆம் ஆண்டில் பொதுச்சபை மண்டபத்தின் சின்னமான பச்சை மேடையில் இருந்து உலகளாவிய தலைவர்களுக்கு தனது முதல் உரையை வழங்கிய யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் 24-ம் தேதி காலையில் உயர் மட்ட அமர்வில் உரையாற்றுவார்.

அமெரிக்காவிற்கு பிறகு பிரேசில் பாரம்பரியமாக, பொது விவாதத்தின் தொடக்க நாளில் இரண்டாவதாக பேசும்.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு,  2019 'குளோபல் கோல்கீப்பர் விருது' வழங்கப்படும்,  தங்கள் நாட்டில் மற்றும் உலகளவில் பயனுள்ள சேவைகள் மூலம்  உலகளாவிய குறிக்கோளுக்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அரசியல் தலைவருக்கு  வழங்கப்படும் ஒரு “சிறப்பு அங்கீகாரம்” ஆகும்.

பிரதமர் மோடி, அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்திற்காக ( ஸ்வச் பாரத் மிஷன்)  இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் இதுவரை, அக்டோபர் 2, 2019க்குள்  திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க  9 கோடி  கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.  இந்தியாவில்  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 சதவீதமாக  இருந்த  கிராமப்புற சுகாதார பாதுகாப்பு தற்போது  98 சதவீதமாக  உயர்ந்து உள்ளது.

காந்தியின் 150 வது பிறந்த நாளை உலகம் நினைவுக்கூரும் வகையில், ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ஈகோசாக்) அறையில் செப்டம்பர் 24 அன்று நடைபெறும் 'தலைமைத்துவ விஷயங்கள்: தற்கால உலகில் காந்தியின் பொருத்தப்பாடு’  என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

செப்டம்பர் 25 ஆம் தேதி ப்ளூம்பெர்க் குளோபல் பிசினஸ் மையத்தில்  பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். ப்ளூம்பெர்க் எல்பி மற்றும் ப்ளூம்பெர்க் பரோபிராபீஸ் நிறுவனர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்ட, ’பிரதமர் மோடியுடன் கேள்வி பதில்’ அமர்வு இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான புதிய சவால்களைத் சமாளிக்க  புதுமையான மற்றும் ஒத்துழைப்பு வழிகளைப் பற்றி விவாதிக்க இந்த மன்றம் உலகளாவிய வணிக மற்றும் அரசாங்கத் தலைவர்களைத் திரட்டுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மோடி தனது நியூயார்க் பயணத்தின் போது, காந்தியின் 150-வது பிறந்தநாளை நினைவுக்கூரும் ஒரு புதுமையான முயற்சியான ‘காந்தி அமைதி தோட்டத்தையும்’ திறந்து வைப்பார்.

இந்த் திட்டத்தின் கீழ் , நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், லாங் தீவை தளமாகக் கொண்ட என்ஜிஓ சாந்தி நிதி மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் - ஓல்ட் வெஸ்ட்பரி ஆகியவை 150 மரங்களை நடும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த தோட்டம் காந்தியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக மரங்களை தத்தெடுக்கின்றனர். இந்த தோட்டம் பல்கலைக்கழகத்தின் 600 ஏக்கர் வளாகத்திற்குள் ஒரு திறந்த இடத்தில் உள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான லட்சியத்தை அதிகரிப்பதற்கும், நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காலநிலை சவாலை எதிர்கொள்ள 2019 காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டை செப்டம்பர் 23 அன்று நடத்தவுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐ.நா. எஸ்.டி.ஜி. உச்சி மாநாட்டை நடத்துகிறது.

Next Story