மாதம் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி பிளஸ் : நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்


மாதம் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி பிளஸ் :  நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்
x
தினத்தந்தி 11 Sep 2019 2:55 AM GMT (Updated: 11 Sep 2019 3:04 AM GMT)

ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்தது.


ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (செப்டம்பர் 10) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.  டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் ஆர்கேட் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவையும் அறிமுகமானது.

ஆப்பிள் ஆர்கேட்:

ஆப்பிள் ஆர்கேட் சேவை இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதே தினத்தில் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளமும் அறிமுகமாகிறது. இதற்கான மாத கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் 4.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஆப்பிள் டி.வி. பிளஸ்:

ஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் 100 சேவையும் ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவைக்கான மாத கட்டணம்  ரூ. 99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்திய பயனாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும். முதல் 7 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அதன்பின்னர் சப்ஸ்கிரிப்ஷனாக மாறிவிடும் .


புதிதாக ஐபோன், ஐபேட், ஆப்பிள் டி.வி., மேக் அல்லது ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. டி.வி. சேவையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. இவற்றில் சில நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமும் ஆப்பிள் நிகழ்வில் வெளியிடப்பட்டன.

 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளியான புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி, எல்.ஜி, ரோகு, சோனி மற்றும் VIZIO ஆகிய தளங்களிலும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story