சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும்- சவூதி அரேபியா


சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும்- சவூதி அரேபியா
x
தினத்தந்தி 18 Sep 2019 10:42 AM GMT (Updated: 18 Sep 2019 12:07 PM GMT)

சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும் என சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் கூறி உள்ளார்.

துபாய்

சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை மீது ஆள் இல்லா விமான  தாக்குதல்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட  மாற்றம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று  லிட்டருக்கு 24-25 பைசா உயர்ந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும் விலை தகவல்களின்படி டெல்லி சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசா அதிகரித்து 72.42 ஆகவும், டீசல் 24 பைசா அதிகரித்து  65.82 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது ஒரு  தேசிய அளவுகோலாகும்.

எரிபொருட்களின் கலால் வரி அதிகரித்ததன் காரணமாக ஜூலை 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு  இது ஒரு பெரிய உயர்வு ஆகும். நேற்று  பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பைசா மற்றும் டீசல்  லிட்டருக்கு 15 பைசா உயர்ந்தது.

சனிக்கிழமையன்று ஆளில்லா விமான  தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் உற்பத்தியை  பாதியாகக் குறைத்தன. இதனால் சர்வதேச எண்ணெய் விலைகள் திங்களன்று கிட்டத்தட்ட 20% உயர்ந்தன.

புதன்கிழமை ப்ரெண்ட் கச்சா பீப்பாய்க்கு 0.26% குறைந்து 64.38 டாலராக இருந்தது. யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (டபிள்யூ.டி.ஐ) கச்சா பீப்பாய்க்கு 0.5% இழந்து 59.06 டாலராக இருந்தது.

சவூதி அரேபியா கச்சா எண்ணெய் ஆலையில்  உற்பத்தியை விரைவாக தொடங்கியதை அடுத்து  சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைய தொடங்கியது.

சவுதி  இளவரசர் முகமது பின் சல்மான் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் நாடு முழுமையாக மீட்கப்படும்  என்று கூறியுள்ளார்.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, வளர்ந்து வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று  தெரிவித்தார்.

இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 83% இறக்குமதி செய்கிறது, இதில் ஐந்தில் ஒரு பகுதியை சவுதி அரேபியா வழங்குகிறது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியா அதன் இரண்டாவது பெரிய சப்ளையர் ஆகும். சவுதி அரேபியா  2018-19 நிதியாண்டில் 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை  இந்தியாவுக்கு விற்றது,. தற்போது நாடு 207.3 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

சவுதி அரம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் கூறும் போது  அப்கைக் மற்றும் குரைசில் உள்ள அதன் ஆலைகள் மீதான பயங்கரவாத தாக்குதல்களால்  நிறுத்தப்பட்ட உற்பத்தி  செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக மீட்டமைக்கப்படும் என் கூறினார்.

உற்பத்தி குறைந்த போதிலும்  இந்தியாவின்  விநியோக ஒப்பந்தங்களை மதிக்கப்போவதாக சவுதி அரம்கோ உறுதியளித்திருந்தது.

Next Story