ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு 10 லட்சம் பேரை தண்டித்த சீனாவின் வலிமைமிக்க தலைவர் ஜி ஜின்பிங்


ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு 10 லட்சம் பேரை தண்டித்த சீனாவின்  வலிமைமிக்க தலைவர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:44 AM GMT (Updated: 11 Oct 2019 10:44 AM GMT)

சுமார் 10 லட்சம் பேரை ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டித்த சீனாவின் வலிமைமிக்க தலைவர் ஜி ஜின்பிங்

பீஜிங்

இந்திய சீன உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியக் கலை நகரான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகை தந்து உள்ளார்.  சீன அரசியல் வரலாற்றில் வலிமை மிக்க தலைவர் என போற்றப்படும் ஜி ஜின்பிங் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன்னராட்சிகளாலும், காலனியாதிக்கத்தாலும், உள்நாட்டு யுத்தங்களாலும் பிளவுபட்டுக் கிடந்த சீனாவை ஒன்றுபடுத்தி நீண்ட பயணப் புரட்சியால், 1949 ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசாக அறிவித்து ஆண்டவர் மா சே துங்.

1976 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும், 1979 ஆம் ஆண்டுவரை இவரது கோட்பாடுகளின்கீழ் செயல்பட்டு வந்தது சீனா. அதன் பின்னர், காலத்திற்கேற்ற மாற்றங்களோடு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களுடன், புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தி அந்த நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியவர் டெங் ஜியோ பிங்.

இந்த இரு பெரும் தலைவர்கள் வரிசையில், சீனாவை உலகின் குறிப்பிடத்தக்க பொருளாதார மையமாக மாற்றும் கொள்கைக்கு ஜி ஜின்பிங்கின் கோட்பாடு என சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இரு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜி ஜின் பிங் தனது கோட்பாடுகளை நிறைவேற்றும் வகையில், 5 ஆண்டு கால அதிபர் பதவியில், ஒருவர் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என்ற அரசியல் அமைப்பு விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் அதிபராகவும் பொறுப்பேற்ற ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் என்பது, வரையறுக்க முடியாததாக தற்போது மாறியுள்ளது.

கட்சியிலும், ஆட்சியிலும் தனது அதிகாரத்தை வலுப்படுத்த ஜி ஜின்பிங் அறிமுகப்படுத்திய கோட்பாடு "புதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஜி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்தம்" என்று அந்த நாட்டில் அழைக்கப்படுகிறது.

இந்த கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாக, கம்யூனிச சித்தாத்தங்கள் மட்டுமன்றி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வது, சீன ராணுவம் மீது கம்யூனிஸ்ட் கட்சி முழு அதிகாரம் செலுத்துவது உள்ளிட்டவை உள்ளன.

இதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அவர் ஆட்சிக்கு வந்தது முதல் ஊழல் குற்றச்சாட்டில் உயர்ந்த பதவிகளில் இருந்த அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 10 லட்சம் பேர் ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டனர்.

அதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் கட்சி, கட்சியின் பொதுச்செயலாளரே நாட்டின் அதிபர் என்றாலும், மேலும் 8 கட்சிகள் உள்ளன.

இந்த கட்சிகள் தங்களை எதிர்க்கட்சிகள் இல்லை என்றும், அரசில் அங்கம் வகித்து ஆலோசனை வழங்கக்கூடியவை என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றன.

அதன்படி, கீழ் நிலையிலிருந்து உயர் மட்ட மக்கள் காங்கிரஸ் வரை அனைத்திலும், இவர்களின் ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஆக, நாட்டின் அதிபர், முப்படைகளின் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர் என, அசைக்க முடியாத வல்லமையுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார் ஜி ஜின் பிங்.

ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் வல்லமை மிக்க தலைவராக உயர்ந்துள்ள ஜி ஜின் பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஜி ஜாங் உன்னின் மகனாக 1953ஆம் ஆண்டு பிறந்தார். 1971 ஆம் ஆண்டு ரசாயன பொறியியல் படித்துக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து பணியாற்றினார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கான இவரது விண்ணப்பம் 9 முறை நிராகரிக்கப்பட்டு, 10 ஆவது முறையாக 1974ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டில் கட்சியின் கிளைச் செயலாளர், 1982 ஆம் ஆண்டில் மாகாண தலைவர், 90 களில் கட்சிப் பள்ளியின் தலைவர் என படிப்படியாக உயர்ந்து 1997 ஆம் ஆண்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரானார் ஜி ஜின்பிங்.

2002 ஆம் ஆண்டு தற்காலிக மாகாண ஆளுநராக செயல்பட்ட காலத்தில் ஊழலுக்கு எதிராக இவர் எடுத்த நடவடிக்கைகள், 2012 ஆம் ஆண்டில் கட்சியின் பொதுச் செயலாளராகவும், ஆட்சியின் அதிபராக ஜி ஜின்பிங்கை உயர்த்தியது.

9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியையும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட சீன நாட்டையும் ஜி ஜின்பிங் அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி அழைத்துச் செல்லப் போகிறார் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Next Story