ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைக்காக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் கைது
ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நடந்த ரகளைக்காக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாங்காங்,
ஹாங்காங், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.
ஹாங்காங்கின் ஆட்சியாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. சீனாதான் நேரடியாக நியமனம் செய்கிறது. இது ஹாங்காங் மக்களின் மன நிலையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜனநாயக ஆதரவு உணர்வு அங்கு வலுப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியும், ரகளையும் நடைபெற்றது.
மேலும், அந்த மசோதா ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதன்பின்னர் மசோதா திரும்பப்பெறப்பட்டது.
ஆனாலும் ஜனநாயக உரிமைகள் கோரி அங்கு மக்கள் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது வன்முறை தாண்டவமாடி வருகிறது. இருப்பினும் மக்களின் கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற ரகளை தொடர்பாக ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் போலீசார் நேற்று அறிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தின்போது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசியபோது உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சோ ஸ்லோக் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அந்த பரபரப்பின் சுவடுகள் மறைவதற்குள் ஜனநாயக ஆதரவு எம்.பி.க்கள் 3 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்து இருப்பது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் 4 எம்.பி.க்களை விசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. ஆனால் லாம் சியூக் டிங் என்ற எம்.பி., போலீஸ் விசாரணைக்காக ஆஜராக மாட்டேன் என கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் நான் சட்டத்தை மீறினேன் என்றால், வந்து என்னை கைது செய்யுங்கள். நான் காத்திருக்கிறேன்” என்றார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story