உக்ரைனுடன் ரகசிய பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு: டிரம்ப் பதவி நீக்க விசாரணை நேரலையில் ஒளிபரப்பு


உக்ரைனுடன் ரகசிய பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு: டிரம்ப் பதவி நீக்க விசாரணை நேரலையில் ஒளிபரப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 5:20 PM GMT)

உக்ரைனுடன் ரகசிய பேரம் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது நடத்தப்பட்டு வரும் பதவி நீக்க விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹன்டார் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; அப்படி செய்யவிட்டால் உங்கள் நாட்டுக்கான பயங்கரவாத தடுப்பு நிதி உதவியை நிறுத்தி விடுவேன் என்று கூறி அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, டிரம்ப் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையின் நடவடிக்கைகள் டி.வி.யில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என ஜனநாயக கட்சி அண்மையில் அறிவித்தது. அதன்படி விசாரணையின் முதல் நேரலை ஒளிபரப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மூத்த அமெரிக்க தூதர் ஜார்ஜ் கென்னட் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில் 2–வது நாளாக நேற்றும் பதவி நீக்க விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த விசாரணையின் போது, உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் (பொறுப்பு) பில் டெய்லர் விசாரணை குழுவின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உக்ரைனின் கியோவ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் கோர்டன் சோண்ட்லேண்ட், ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி உரையாடலை எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒட்டுகேட்டார்.

உரையாடலின் போது, ஜோ பிடெனின் விசாரணை குறித்து டிரம்ப் விசாரித்ததாகவும், அதற்கு உக்ரைன் அதிகாரிகள் விசாரணையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக கோர்டன் சோண்ட்லேண்ட் பதில் அளித்ததாகவும் எனது ஊழியர் கூறினார்.

மேலும் தொலைபேசி உரையாடலுக்கு பின் கோர்டன் சோண்ட்லேண்டுடன் பேச்சு கொடுத்த எனது ஊழியர் உக்ரைன் குறித்து டிரம்ப் என்ன நினைக்கிறார் என அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஜோ பிடென் விசாரணையில் டிரம்ப் அதிக அக்கறை காட்டுவதாக பதிலளித்தார்.

இதன் மூலம் ஜோ பிடென் மீதான விசாரணையை பகிரங்கமாக அறிவிக்க உக்ரைன் அதிபர் ஒப்புக் கொள்ளாவிட்டால், உக்ரைனுக்கான ராணுவ உதவியை தடுத்து நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தியது என்பது புரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு பிறகு இது குறித்து பத்திரிகையாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, முதல் முறையாக நான் அதைக் கேட்டேன்’’ என பதிலளித்தார்.

Next Story