2014-ம் ஆண்டு 298 பேரை பலிகொண்ட சம்பவம்: மலேசிய விமானத்தை சுட்டுவீழ்த்த ரஷியா கட்டளையிட்டதா?


2014-ம் ஆண்டு 298 பேரை பலிகொண்ட சம்பவம்: மலேசிய விமானத்தை சுட்டுவீழ்த்த ரஷியா கட்டளையிட்டதா?
x
தினத்தந்தி 15 Nov 2019 10:58 PM GMT (Updated: 15 Nov 2019 10:58 PM GMT)

2014-ம் ஆண்டு 298 பேரை பலிகொண்ட சம்பவத்தில், மலேசிய விமானத்தை சுட்டுவீழ்த்த ரஷியா கட்டளையிட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச். 17 விமானம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 298 பேருடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம் ரஷியா-உக்ரைன் எல்லைக்கு அப்பால் சுமார் 50 கி.மீ தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் கடலில் விழுந்து, நொறுங்கியதாக கூறப்பட்டது. இது குறித்து நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விசாரணை குழு நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தெரியவந்து.

இது தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் தொடங்குகிறது.

இந்த நிலையில், எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்திய கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளை ரஷியாவின் உயர் அதிகாரிகள் வழிநடத்தியதாக சர்வதேச விசாரணைக்குழு குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய அதிபர் புதினின் மூத்த உதவியாளர் ஒருவர் கிழக்கு உக்ரைனிலுள்ள பிரிவினைவாதிகளுடன் தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.


Next Story