அமெரிக்காவில் மின் கம்பியில் தொங்கிய விமானம்; விமானி உயிர் தப்பிய அதிசயம்


அமெரிக்காவில் மின் கம்பியில் தொங்கிய விமானம்; விமானி உயிர் தப்பிய அதிசயம்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:15 PM GMT (Updated: 26 Nov 2019 6:18 PM GMT)

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் சாகோபே நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. தாமஸ் கோஸ்கோவிச் (வயது 65) என்ற முதியவர் விமானத்தை ஓட்டினார். விமானத்தில் அவர் மட்டுமே இருந்தார்.

வாஷிங்டன், 

தாழ்வாக பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பிகளுக்குள் சிக்கி கொண்டது. இதில் விமானம் தலைகீழாக தொங்கியது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மீட்பு பணியை தொடங்கினர்.

ராட்சத கிரேன் மூலம் விமானத்துக்குள் சிக்கியிருந்த விமானியை பத்திரமாக மீட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு விமானத்தை மின்கம்பிகளில் இருந்து அகற்றினர்.

இந்த விபத்தில் விமானி தாமஸ் கோஸ்கோவிச் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியது மிகப்பெரிய அதிசயம் என மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

Next Story