அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகைக்கு மேலே பறந்த மர்ம விமானம்


அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகைக்கு மேலே பறந்த மர்ம விமானம்
x
தினத்தந்தி 27 Nov 2019 10:31 PM GMT (Updated: 27 Nov 2019 10:31 PM GMT)

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு மேலே பறந்த மர்ம விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அந்த நாட்டு ஜனாதிபதியின் வசிப்பிடம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ அலுவலகமாக இருந்து வருகிறது. இது 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கடந்த 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக வெள்ளை மாளிகைக்கு மேலே அனுமதியின்றி விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெள்ளை மாளிகைக்கு மேலே மர்ம விமானம் ஒன்று பறந்தது ரேடார் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வெள்ளை மாளிகையை சுற்றிப்பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைக்காக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

மர்ம விமானத்தை கண்டறிய உடனடியாக போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. எனினும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

Next Story