இந்திய மாணவி உள்பட 22 பேர் பலியான தாக்குதல்: 7 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை - வங்காளதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


இந்திய மாணவி உள்பட 22 பேர் பலியான தாக்குதல்: 7 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை - வங்காளதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 11:15 PM GMT (Updated: 27 Nov 2019 10:38 PM GMT)

வங்காளதேசத்தில் இந்திய மாணவி உள்பட 22 பேரை பலி கொண்ட தாக்குதலில் தொடர்புடைய 7 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலுக்குள் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 5 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஓட்டலுக்குள் இருந்த வெளிநாட்டினர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகள் தப்பி ஓட முடியாதபடி பாதுகாப்பு படையினர் ஓட்டலை சுற்றிவளைத்து பதில் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சுமார் 12 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதையடுத்து, அதிரடியாக ஓட்டலுக்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்று விட்டு, பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.

எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தரிஷி ஜெயின் (வயது 19) என்கிற மாணவி உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 17 பேரும், பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் உள்பட வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேரும் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால் அதனை ஏற்க மறுத்த வங்காளதேச அரசு இந்த தாக்குதலை உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான ‘ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்’ நடத்தியதாக கூறியது.

உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து வங்காளதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

நாடு முழுவதும் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 1,000 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் ஓட்டல் தாக்குதலில், உயிர் இழந்த 5 பயங்கரவாதிகள் தவிர மேலும் 17 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் 9 பேர் ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் உயிர் இழந்த நிலையில், 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததோடு, நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை டாக்கா ஐகோர்ட்டில் நேற்று நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 8 பயங்கரவாதிகளில் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அவர்கள் 7 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மற்றொரு நபர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிகள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story