உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்


உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்
x
தினத்தந்தி 9 Dec 2019 8:42 AM GMT (Updated: 9 Dec 2019 9:53 AM GMT)

பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார்.

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே கடந்த 3 ஆம் தேதி பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த 34 வயதான சன்னா மரின், பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகில் ஆட்சியில் இருக்கும் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சன்னா மரின் தனது 27 வது வயதில் அவரது சொந்த ஊரான டம்பியரில் நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு பின்லாந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார். 

இது குறித்து பேசிய சன்னா மரின், “நான் எனது வயதை ஒரு பொருட்டாக கருதியதில்லை. மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான வழி குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன” என்று கூறினார்.

Next Story