சைபீரியாவை நோக்கி வேகமாக நகரும் பூமியின் காந்த வட துருவம் -குழப்பத்தில் விஞ்ஞானிகள்


சைபீரியாவை நோக்கி வேகமாக நகரும் பூமியின் காந்த வட துருவம் -குழப்பத்தில் விஞ்ஞானிகள்
x
தினத்தந்தி 20 Dec 2019 10:53 AM GMT (Updated: 20 Dec 2019 10:53 AM GMT)

சைபீரியாவை நோக்கி பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகர்ந்து வருவதால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

வாஷிங்டன்,

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும்  அதாவது பூமியை சுற்றி இருக்கும் காந்த புலத்திற்கு  இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரியவந்து உள்ளது. பூமியின் காந்த மண்டலம் தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இருக்காது. பூமியின் ஆழத்தில் திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவம்  இயக்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் - நாசா, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) மற்றும் அமெரிக்க வன சேவை உட்பட மேப்பிங் முதல் விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு வரை அன்றாட நடவடிக்கைகளில் இந்த காந்த துருவங்களைப் பயன்படுத்துகின்றன.

பூமியின் காந்த வடதுருவம் என்பது காந்தப்புலத்தை பொறுத்து, புவி மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளி. இது காலத்தை பொறுத்தும், புவியியல் மாற்றத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பூமியின் காந்த வட துருவத்தின் அமைவிடம் கடந்த 1831-ம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்டிக் பகுதியில் இருந்து சைபீரியாவை நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக புவியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881-ம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு 10 கி.மீ. வேகத்தில் இடம் பெயர்ந்து வருவதை  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சமீபகாலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி ஆண்டுக்கு சராசரியாக 54.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது, விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் காந்தபுலம், குறிப்பாக காந்த வடதுருவத்தை அடிப்படையாக கொண்டே உலகளாவிய போக்குவரத்து கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் திசைகாட்டும் கருவியில் புதிய மாற்றங்கள் வேகவேகமாக செய்யப்பட்டு வருகிறது.

காந்த வட துருவத்தின் வேகமான இடப்பெயர்ச்சியால், நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன் ராணுவங்கள் தங்கள் பயண திட்டங்களுக்கான உலக காந்த மாதிரியை குறிப்பிட்ட ஆண்டை விட, ஓராண்டு முன்னதாகவே மாற்றி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வரும், 2020-ம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல் படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் வேகம் சற்றே குறைந்து இனி ஆண்டுக்கு சராசரியாக 40 கி.மீ. என இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், 1831-ம் ஆண்டு முதல் தற்போது வரை காந்த வடதுருவம் 2,253 கி.மீ., தூரம் பயணித்துள்ளது.

பூமியின் தற்போதுள்ள இரு காந்தப் புலங்களும் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தெரிய  ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புவியியல் துருவங்களைப் போலல்லாமல், காந்த துருவங்கள் வடதுருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு தென் துருவத்தில் இருந்து வட துருவத்திற்கும் மாறலாம். இது கடந்த காலங்களில் நிகழ்ந்ததாகவும், இந்த நிகழ்வு ஒவ்வொரு சில லட்சக்கணக்கான ஆண்டுகளிலும் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த மாற்றம் எப்போது நடக்கும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியாது, அத்தகைய மாறுதல் உடனடியாக நிகழும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Next Story