கொரோனா வைரஸ் தாக்குதல்: சோம்பி நகரம் போல் மாறி விட்ட சீனாவின் யுவான் நகரம்?


கொரோனா வைரஸ் தாக்குதல்: சோம்பி நகரம் போல் மாறி விட்ட சீனாவின் யுவான் நகரம்?
x
தினத்தந்தி 24 Jan 2020 11:06 AM GMT (Updated: 24 Jan 2020 11:55 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல்: யுவான் நகரம் முழுவதும் மக்கள் தெருக்களிலும் மருத்துவமனையிலும் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சோம்பி நகரமாக காட்டுகின்றன.

பெய்ஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. யுவான் நகரையும் தாண்டி இந்த வைரஸ் பரவி 830 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மேலும் பரவாமல் இருப்பதற்காக 5 நகரங்களில் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

ஒரு கோடிக்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட யுவான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து யுவானுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் பிடியில் யுவான்  காட்சிகள் சீன மக்கள் நகரம் முழுவதும் தெருக்களிலும் மருத்துவமனையிலும் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி யுவான் நகரம் சோம்பி  நகரம் போல் மாறி விட்டதாக  கூறப்படுகிறது.

யுவானைத் தொடர்ந்து 70 லட்சம் மக்கள் வசிக்கும் ஹூவாங்காங் நகரமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் 26 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாளை சீன புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் துவங்க உளள நிலையில் லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்து போக இருப்பதால் நோய் தொற்று பலமடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜப்பான், தாய்லாய்ந்து, தென் கொரியா, தைவான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

காட்டு விலங்குகளை உணவாக உட்கொள்ளுவதால் கொரோனாவைரஸ் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், பாம்புகளில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வைரஸ் தாக்குதல் பயத்தில்  ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையை முற்றுகையிடுகிறார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. 

மேலும், சீனாவில் ஹாங்ஷிஜியான்டோஜிபி, இஸோயு, லிச்சுவான், கியான்ஜியாங் ஆகிய நகரங்களிலும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பேக்கேஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கு ஹுபே மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தின் ஒன்பது நகரங்களில் வசிக்கும் குறைந்தது 2.4 கோடி  மக்களை  சந்திர புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக தனிமைப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் சர்வதேச பங்குசந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. நேற்று நியூயார்க் பங்கு சந்தை வர்த்தக துவக்கத்தில் 200 புள்ளிகள் சரிந்தது. யுவானுக்கு அப்பாலும் சீன அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அடுத்து இது பின்னர் ஓரளவு அதிகரித்து  29 ஆயிரத்து 160 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. 

Next Story