பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய தலைவர்கள் பேசி வருகின்றனர் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு


பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய தலைவர்கள் பேசி வருகின்றனர் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Jan 2020 8:19 PM GMT (Updated: 29 Jan 2020 8:19 PM GMT)

பாகிஸ்தானின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்திய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்,

டெல்லியில் பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்திய பிரதமரின் பேச்சினை பாகிஸ்தான் மீதான பாஜக அரசின் ஆவேசம் நிறைந்த கருத்தாக பார்க்கிறோம். பாஜக அரசின் கொள்கைகள் மீதான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்கான நடவடிக்கையாகவே இதை கருதுகிறோம். 

எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் முறியடிக்க பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தினர் தயாராக உள்ளனர். அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 

பாகிஸ்தானின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்திய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். 

தெற்காசியாவின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story