தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்


தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்
x
தினத்தந்தி 9 Feb 2020 11:30 PM GMT (Updated: 9 Feb 2020 10:39 PM GMT)

தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. 17 மணி நேர போராட்டத்துக்கு பின் கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாங்காங், 

தாய்லாந்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் ஜக்ராபந்த் தோம்மா. இவர் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 3.30 மணியளவில் நஹ்கோன் ராட்ச‌ஷிமா மாகாணம் கொராட் நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார்.

அங்குள்ள ஆயுத கிடங்குக்குள் அத்துமீறி நுழைந்த அவர் எந்திர துப்பாக்கி ஒன்றை எடுத்து, பணியில் இருந்த மூத்த ராணுவ அதிகாரியையும், அவரது உறவுக்கார பெண்ணையும் சுட்டுக்கொன்றார்.

பின்னர் ராணுவ முகாமின் நுழைவாயிலுக்கு வந்த அவர் சக வீரர் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு, அங்கிருந்த காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

பின்னர் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவாறே காரை ஓட்டி சென்றார். இதனால் சாலையில் நடந்து சென்ற மக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

அதனை தொடர்ந்து, அங்குள்ள பிரபலமான வணிக வளாகம் முன்பு காரை நிறுத்திய தோம்மா காரில் இருந்து இறங்கி கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு தள்ளினார்.

அதன் பின்னர் அவர் வணிக வளாகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கு பெரும் பீதி தொற்றிக்கொண்டது.

அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் அங்குள்ள கடைகளுக்குள் சென்று பதுங்கி கொண்டனர். ஆனாலும் தோம்மா அங்கிருந்தவர்களை ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டார்.

இந்த கொடூர தாக்குதலில் ராணுவ முகாமில் கொல்லப்பட்ட 3 பேரையும் சேர்த்து, மொத்தம் 17 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் தாக்குதல் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதே சமயம் வணிக வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்து ஏராளமான மக்களை தோம்மா பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டார்.

4-வது தளத்தை தவிர்த்து, வணிக வளாகம் முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஒலி பெருக்கி மூலம் தோம்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சரணடையும்படி கேட்டுக்கொண்டனர்.

மேலும் அவரது தாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மூலமாகவும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

அதனை தொடர்ந்து, தோம்மாவை சுட்டுக்கொன்று பிணைக்கைதிகளை மீட்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தனர். அதன்படி சுமார் 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.30 மணிக்கு தோம்மாவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அதன் பின்னர் 4-வது தளத்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அவர்களில் சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 57 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, அந்த நாட்டின் பிரதமர் பிரயுத் சான்ஓச்சா, காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘‘தாய்லாந்தில் இதுபோன்ற கொடூர தாக்குதல் நடந்தது இல்லை. இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தோம்மாவின் தனிப்பட்ட ஏமாற்றம் மற்றும் அதனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக இந்த தாக்குதல் நடந்ததாக நம்பப்படுகிறது’’ என கூறினார்.

Next Story