சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 902 ஆக உயர்வு


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 902 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Feb 2020 1:06 AM GMT (Updated: 10 Feb 2020 1:06 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று முன்தினம் 723 ஆக உயர்ந்திருந்தது.  இதேபோன்று 34 ஆயிரத்து 598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவர் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.  இதேபோன்று உகான் நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளது உறுதியானது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்தது.  இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர்.  இந்த நிலையில், அதன் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில், 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது.  இதேபோன்று 39,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.

Next Story