நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்: இணையத்தில் வைரலாகும் வீடியோ


நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்: இணையத்தில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 14 Feb 2020 12:30 AM GMT (Updated: 14 Feb 2020 12:16 AM GMT)

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான தன் மகளுடன், அவரது தாய் உரையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியோல், 

அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளை நேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம் விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம்.

இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி இறந்துபோன நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வைக்கும் புதுமையான முயற்சியை கையில் எடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு ‘மீட்டிங் யூ’ என அந்த நிறுவனம் பெயர் சூட்டியது.

இந்த நிகழ்ச்சியில் ஜாங் ஜி சங் என்ற பெண் கலந்து கொண்டார். அதில் கடந்த 2016-ல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன் பற்றி கவலையுடன் பேசினார்.

அதன் பின்னர் அவரிடம் வி.ஆர்., மூலமாக அவரது மகளை சந்திக்க வைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி, பிரத்தியேக ‘ஹெட்செட்’ கையுறை ஆகியவற்றை அணிந்து, விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் நுழைந்தார்.

இதில் அவரது மகள் நயோன், நிஜத்தில் இருப்பது போலவே அவர் கண்முன் தோன்றினார். மகளை பார்த்ததும் ஜாங் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இருவருக்குமான உரையாடல் நீண்டு கொண்டே போகிறது. சிறிது நேரத்துக்கு பிறகு நயோன் அப்படியே தூங்கிவிடுகிறாள். அத்துடன் ஜாங், விர்சுவல் ரியாலிட்டி உலகத்தில் இருந்து வெளியே வந்து விட்டார். தாய், மகளுக்கு இடையிலான இந்த பாசப்போராட்டத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ பதிவு செய்து ஆவணப்படமாக வெளியிட்டு உள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story