கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு


கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 Feb 2020 11:45 PM GMT (Updated: 19 Feb 2020 11:43 PM GMT)

ஜப்பான் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை கொள்ளை கும்பல் ஒன்று திருடி சென்றது.

பீஜிங், 


சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக ஜப்பானில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியதே இதற்கு காரணம். 

அவர்கள் அனைவரும் ஜப்பானில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஜப்பான் மக்களிடையே கொரோனா குறித்த பீதி அதிகமாகி உள்ளது. எனவே அங்குள்ள மக்கள் வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக முகக்கவசம் வாங்கி அணிந்து வருகின்றனர். இதன் காரணமாக ஜப்பானில் முகக்கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் இணையத்தில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் துறைமுக நகரமான கோபேவில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று, அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை திருடி சென்றனர்.

ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்டோர் ரூமின் பூட்டை உடைத்து 6 ஆயிரம் முகக்கவசங்களை திருடி சென்றதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் தினசரி தேவைக்கான முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், முகக்கவசங்களை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதற்காக கொள்ளை கும்பல் திருடி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Next Story