ஜப்பான் கப்பலில் இருந்து வெளியேறும் பயணிகளை தவிர்க்கும் டாக்சி டிரைவர்கள்


ஜப்பான் கப்பலில் இருந்து வெளியேறும் பயணிகளை தவிர்க்கும் டாக்சி டிரைவர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2020 1:26 PM GMT (Updated: 20 Feb 2020 1:26 PM GMT)

ஜப்பான் கப்பலில் இருந்து வெளியேறும் பயணிகளை வைரஸ் அச்சத்தில் டாக்சி டிரைவர்கள் தவிர்க்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

யோகோஹமா,

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.  அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

கப்பலில் உள்ள பயணிகளுக்கு தொடர்ந்து 14 நாட்களாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  கப்பலில் பயணித்தவர்களில் 621 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உயிரிழந்த இருவரும் பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிகிச்சைக்காக கப்பலில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா தொற்று பாதித்த பயணிகள் இருக்கும் டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கானோரை ஜப்பான் அரசாங்கம் வெளியேற்றியுள்ள சம்பவம் மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து 443 பேர் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அதிகாரிகள் சான்றிதழ் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான பயணிகளை அரசு வெளியேற்றுவதற்கு முன்தினம், கப்பலை பார்வையிட சென்ற ஒரு மருத்துவ நிபுணர், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர், கப்பல் மகா குழப்பத்தில் உள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், கப்பலிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருந்த இரண்டு பயணிகள் இறந்துபோன தகவலும் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் இப்படி நூற்றுக்கணக்கானோர் கப்பலிலிருந்து ஊருக்குள் வரும் விஷயம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கிடையில், வெளியேறும் பயணிகளில் ஒருவரே, தான் நன்றாகத்தான் இருக்கிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அரசு கருதுவதுபோல், கப்பலிலிருந்து வெளியேறியவர்களுக்கு தொற்றும் இல்லை, அவர்கள் நோய் வெளியாகும் காலத்திற்கு முந்தைய கட்டத்திலும் இல்லை என்றால் நல்லது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று வெளியாவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதையடுத்து, வெளியேறியவர்களுக்கு ஒரு வேளை தொற்று வெளியானால், பொதுமக்களுக்கு அது பிரச்சினையாகத்தான் முடியும் என்று கருதுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கப்பலில் இருந்து வெளியேறும் பயணிகளை வைரஸ் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சத்தில் டாக்சி டிரைவர்கள் தவிர்க்கும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.

பொதுவாக துறைமுகத்திற்கு கப்பல் ஏதாவது வந்தால், டாக்சி டிரைவர்கள் பயணிகளை ஏற்றிக்கொள்ள முண்டியடிப்பர்.  ஆனால், டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து வெளியே வரும் பயணிகளை வரவேற்க போதுமான டாக்சிகள் அங்கு இல்லை.

பேருந்துகள் இருந்தன என்றாலும், அவற்றின் டிரைவர்கள்  முழுவதும் பிளாஸ்டிக் ஷீட்களால் தங்களை மூடிக்கொண்டிருந்தனர். துறைமுகத்துக்கு வெளியே நடமாடும் பணியாளர்கள் கூட பாதுகாப்பு உடைகளுடன்தான் நடமாடுகின்றனர்.

Next Story