உலக செய்திகள்

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு + "||" + 46 Thousand years ago the discovery of the body of a dead bird

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு
46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

ரஷியாவின் அங்கமாக திகழ்கிற சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் பெலாயா கோரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், உள்ளூர் வேட்டைக்காரர்கள், செத்துப்போன ஒரு பறவையின் உடலை கண்டுபிடித்தனர்.

அந்தப் பறவை பல்லாண்டு காலத்துக்கு முன்பே செத்துப்போய் அதன் உடல் பனியில் அப்படியே புதைந்து இருக்கிறது என கருதிய அவர்கள், அந்த உடலை சுவீடன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் மற்றும் லவ் டாலன் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.


‘ரேடியோகார்பன் டேட்டிங்’ என்று அழைக்கப்படக்கூடிய கதிரியக்க கரிம காலகணிப்பு முறையில் ஆராய்ந்த போது அந்தப் பறவை சுமார் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பனியுகம் என்று அழைக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் வாழ்ந்து செத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இதையொட்டி ஆராய்ச்சியாளர் லவ் டாலன் சி.என்.என். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வானம்பாடி பறவையின் 2 கிளை இனங்களின் மூதாதையராக இருக்கலாம்” என கூறினார்.

ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் கூறும்போது, “இந்த கண்டுபிடிப்பு விலைமதிப்பற்றது. ஏனெனில் இது பனியுக விலங்கு இனங்களின் பரிணாம வளர்ச்சியை படிப்பதற்கும், கடந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை மாற்றங்களை புரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள பறவை, 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த நாய்க்குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் கிடைத்துள்ளது” என கூறினார்.