உலக செய்திகள்

ஆளும் கூட்டணியில் விரிசல்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது திடீர் ராஜினாமா + "||" + Malaysia's Mahathir submits resignation, 'quits' his party

ஆளும் கூட்டணியில் விரிசல்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது திடீர் ராஜினாமா

ஆளும் கூட்டணியில் விரிசல்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது திடீர் ராஜினாமா
ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து, மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலை எதிர்கொண்டன.

பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாதீர் முகமது பிரதமரானார். இதன் மூலம் அவர் உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார். அந்த கூட்டணியின் சார்பில் இது தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ஆட்சி பொறுப்பை இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் நவம்பர் மாதம் நடைபெறும் ஏபெக் மாநாட்டுக்கு பிறகுதான் தம்மால் பதவி விலக இயலும் என மகாதீர் முகமது திட்டவட்டமாக கூறினார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மகாதீர் முகமது அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது.

இதனால் அன்வரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிய ஆட்சி அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியின் துணை தலைவரும், மத்திய மந்திரியுமான அஸ்மின் அலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து மகாதீருக்கு நாடாளுமன்றத்தில் 132 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. எனவே மகாதீர், அன்வரை புறக்கணித்து புதிய ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் பரவின.

கூட்டாளிகளே துரோகம் இழைத்துவிட்டனர்

இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்த அன்வர் இப்ராஹிம், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கூட்டாளிகளே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் புதிய ஆட்சி உடனடியாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு நேரப்படி மதியம் 1 மணியளவில் அளிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட மன்னர், அதுகுறித்து என்ன முடிவெடுத்துள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் முகமது விலகியுள்ளதை அடுத்து, மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மலேசிய மக்கள் தங்களுடைய புதிய பிரதமர் யார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மகாதீர் முகமது கட்சியின் 26 எம்.பி.க்கள், தனது கட்சியில் நீக்கப்பட்ட 10 எம்.பி.க்கள் ஆகியோரின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வர் தலைமையிலான ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

எனவே அவரின் பிரதமர் கனவு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நடப்பு அரசியல் குழப்பங்களை மனதில் கொண்டு மலேசிய மன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மலேசிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம் - இன்று பதவி ஏற்கிறார்
மலேசிய நாட்டின் பிரதமராக முகைதீன் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார்.