கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்


கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்
x
தினத்தந்தி 16 March 2020 12:32 PM GMT (Updated: 16 March 2020 12:32 PM GMT)

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? என்ற புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

பெய்ஜிங்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Next Story