பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா: இங்கிலாந்து ராணி, வீட்டுக்கு மாற்றம்


பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா: இங்கிலாந்து ராணி, வீட்டுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 March 2020 12:22 AM GMT (Updated: 23 March 2020 12:22 AM GMT)

பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து ராணி, வீட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

லண்டன், 

இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தும், பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியும் சென்று கொண்டிருக்கிறது. அங்கு ராணி இரண்டாம் எலிசபெத்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அவருடன் பணியாற்றும் பிற ஊழியர்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அரண்மனையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த பணியாளர் ராணியுடன் எந்த அளவுக்கு தொடர்பு உடையவர் என தெரியவில்லை. மேலும் கொரோனா பாதித்த ஊழியர் பற்றிய விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த தகவலையும் மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.

அரண்மனை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 93 வயதான ராணி எலிசபெத் லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கொடிய வைரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எலிசபெத் ராணி வருகிற நாட்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story