கடற்பறவையின் உணவு பழக்கத்தை மாற்றிய ஊரடங்கு


கடற்பறவையின் உணவு பழக்கத்தை மாற்றிய ஊரடங்கு
x
தினத்தந்தி 6 May 2020 10:30 PM GMT (Updated: 6 May 2020 9:57 PM GMT)

ஊரடங்கு கார்ணமாக கடற்பறவைகள் தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.

ரோம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. கொரோனா தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இது, மனிதர்களின் உணவு பழக்க வழக்கத்தை மட்டுமின்றி பறவைகளிடமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இத்தாலியின் ரோம் நகர தெருக்களில் ஆயிரக்கணக்கான ‘சீ கல்’ என்னும் கடற்பறவைகள் காணப்படுகின்றன.

இவை, எப்போதும் ரோம் நகரவாசிகள் பாசத்துடன் வீசும் உணவு பொருட்களையே தின்று வந்தன. மக்கள் அசந்த நேரத்தில் அவர்கள் சாப்பிடும் உணவை இந்த கடற்பறவைகள் தட்டிப்பறித்து சென்று தின்னும் வேடிக்கை சம்பவங்களும் அன்றாடம் அரங்கேறும்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ரோம் நகரவாசிகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் கடற்பறவைகள் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால் வெகுவிரைவிலேயே சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவை உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டன. அதாவது வேட்டையாடி தின்னும் பிராணிகளாக அவை மாறிவிட்டன.

தற்போது எலி, புறா, ஊர்க்குருவி என எதையும் கடற்பறவைகள் விட்டு வைப்பதில்லை. அவற்றை துரத்திச் சென்று இரையாக்கி கொள்கின்றன.

இதுபற்றி ரோம் நகரின் உயிரியல் ஆய்வாளர் புருனோ கூறும்போது, “மனிதர்களைப் போலவே சூழ்நிலைக்கு தக்கவாறு கடற்பறவைகளும் வாழப்பழகி கொண்டுவிட்டன. அவை எலிகளை பிடித்து தின்பது நல்ல விஷயம்தான். நகரில் எலித்தொல்லை குறையும்” என்றார்.

Next Story