கென்யா விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பலி - பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?


கென்யா விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பலி - பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
x
தினத்தந்தி 7 May 2020 12:44 AM GMT (Updated: 7 May 2020 12:44 AM GMT)

சோமாலியாவில் மருத்துவ பொருட்கள் கொண்டு சென்ற கென்யா நாட்டு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர். இந்த விமானம் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யூகங்கள் எழுந்துள்ளன.

மொகாதீசு, 

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. கொரோனாவை ஒழிக்க ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றன.

அதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், முக கவசங்கள், மருத்துவர்களுக்கான கையுறைகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அரசு சார்பில் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் ஆகியவை விமானங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

அந்த வகையில் கென்யாவின் ‘ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான இ.எம்.பி. 120 ரக விமானம் ஒன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்களை வினியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இ.எம்.பி. 120 ரக விமானம் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீசுவில் இருந்து பய்தோவா நகருக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

பய்தோவா நகரில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் விமானம் தீப்பிடித்து எரிந்தவாறே தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது.

விமானத்தில் பயணம் செய்த கென்யா நாட்டைச் சேர்ந்த 2 பேரும், சோமாலியா பிரஜைகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகின.

விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் விமானம் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்திருப்பதால், அந்த கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பய்தோவா விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ‘விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்தேன்’ என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் ராணுவ மந்திரி அப்திராஷித் அப்துல்லாஹி முகமது தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் சர்வதேச உதவியை வரவேற்பதாகவும் சோமாலியா அரசு தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வரை பய்தோவா நகர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story