தாய்லாந்தில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல வாரச்சந்தை மீண்டும் திறப்பு


தாய்லாந்தில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல வாரச்சந்தை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 10 May 2020 11:30 PM GMT (Updated: 10 May 2020 9:46 PM GMT)

தாய்லாந்தில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல ‘சட்டுசக்’ வாரச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு 10 ஆயிரம் வியாபாரிகள் கடை வைத்துள்ளனர்.

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் கம்பங்க் பெட் பகுதியில் உள்ள ‘சட்டுசக்’ வார இறுதி சந்தை பற்றி கேள்விப்படாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். தாய்லாந்து செல்வோர் இந்த சந்தையை பார்க்காமல் திரும்புவதும் அபூர்வம்.

அந்நாட்டிலேயே மிகப் பெரிய சந்தையான இங்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிட 2 லட்சம் பேர் வரை கூடுவார்கள்.

இங்கு ஜவுளி, கலை, பீங்கான், அழகு சாதன, பர்னிச்சர், எலக்ட்ரானிக் மற்றும் உணவு என ஆயிரக்கணக்கான பொருட்கள் மலிவு விலையில் தாராளமாக கிடைக்கும். சட்டத்துக்கு விரோதமாக சிறிய வகை அபூர்வ விலங்குகளும் இந்த சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் உண்டு.

தாய்லாந்தில் கொரோனா வேகமாக பரவியதால் அதை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி இந்த சந்தை மூடப்பட்டது. அண்மையில் ஊரடங்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து இதை மீண்டும் திறக்க நகர நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி சட்டு சக் சந்தை நேற்று திறக்கப்பட்டது. 10,334 கடைக்காரர்கள் மொத்தம் 15 ஆயிரம் ஸ்டால்களை அமைத்திருந்தனர்.

முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அனுமதிப்பட்டனர்.

இதேபோல் சமூக இடைவெளியும் கறாராக பின்பற்றப்பட்டது. சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான, அங்குள்ள 6 கழிப்பறை கூடங்களிலும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தை செயல்படும் எனவும், இரவு நேர கடைகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாங்காக் நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story