கொரோனா நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க புதிய ஊரடங்கு வழிமுறைகள் - அறிவியலாளர்கள்


கொரோனா நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க புதிய ஊரடங்கு வழிமுறைகள் - அறிவியலாளர்கள்
x
தினத்தந்தி 21 May 2020 12:30 PM GMT (Updated: 21 May 2020 12:30 PM GMT)

கொரோனா நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க புதிய ஊரடங்கு வழிமுறைகளை கண்டுபிடித்த இங்கிலாந்து அறிவியலாளர்கள்.

லண்டன்
உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நோய் பாதிப்பிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் 27 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கபட்டு ஆங்காங்கு சில தளர்வுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

லண்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாததால், ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில்  248,818-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 35-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக ஊரடங்கில் சில விதிமுறைகள் போரிஸ் ஜான்சன் தளர்த்தி வரும் நிலையில், அடுத்த மாதம் வரை ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த 50 நாள் ஊரடங்கு, முப்பது நாள் தளர்வு எனப் புதிய முறையை இங்கிலாந்து அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி 16 நாடுகளின் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவில்  இடைவெளிவிட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைத்துள்ளனர்.

முதலில் 50 நாள் ஊரடங்கும், அதன்பின் 30 நாள் தளர்வும் என மாறி மாறி நடைமுறைப்படுத்தினால் நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டை 2022ஆம் ஆண்டு வரை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் சோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைப் பின்பற்றினால் வேலையிழப்பையும், நிதிச் சிக்கலையும் தவிர்க்க முடியும் என இந்த ஆராய்ச்சிக்குத் தலைமையேற்ற ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


Next Story