கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக போராட்டம்; வன்முறை


கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக போராட்டம்; வன்முறை
x
தினத்தந்தி 1 Jun 2020 11:15 PM GMT (Updated: 1 Jun 2020 8:34 PM GMT)

கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கலவர தடுப்பு போலீசார் மீது கற்களை எறிந்ததால் பரப்பபு நிலவியது.


Next Story