கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...


கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...
x
தினத்தந்தி 2 Jun 2020 4:30 AM GMT (Updated: 2 Jun 2020 9:30 AM GMT)

கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.

மிலன்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உயர்ந்து உள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437ஆக உயர்ர்ந்து உள்ளது.

ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு முதல் இலக்கு இத்தாலிதான். பிப்ரவரி 21-ஆம் தேதியன்று கொரொனா வைரஸின் முதல் பாதிப்பு வெளியானது.  அங்கு இதுவரை  2,33,197 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம்  33,475 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இத்தாலியில் கொரோனா தாக்குதலின் ஆரம்ப நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. ஏனெனில் கொரோனா வயதானவர்களை எளிதில் தாக்கியது.  

இத்தாலி இப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது.. கிட்டத்தட்ட மூன்று மாத ஊரடங்கிற்கு பின்னர் தலைநகர் ரோம் திறக்கப்பட்டுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான ரோமில் கொலோசியம் மற்றும் வாடிகன் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட போது, ​​மக்கள் திரளாக வந்து மகிழ்ந்தனர்.

தற்போது, கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்து  வருகிறது. விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை… அதற்கு முன்பு வைரஸே, தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.

இத்தாலியின் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜங்கரிலோ கூறும் போது 

கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இத்தாலியில் இல்லை. அதோடு, ஸ்வாப் பரிசோதனையின் கடைசி 10 நாட்களில் கண்டறியப்பட்ட வைரஸானது, கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என்பது அனுமானங்களே. இப்படி தேவையில்லாத அச்சங்ளை பரப்புபவர்களிடம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆனால் தேவையற்ற பயத்தால் இறக்க கூடாது என்ற ஜாங்கெரில்லோவின் கூற்றுக்குப் பிறகு ஒரு புதிய விவாதம் தொடங்கி உள்ளது. 

இத்தாலியில், ஜாங்கெரில்லோவின் கூற்றை நிராகரித்த மற்றொரு மருத்துவக் குழு, கொரோனா குறித்து இத்தாலிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான அமைப்பின் தலைவரின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக கூறி உள்ளது. 

மறுபுறம், இந்த கூற்றுக்கு விஞ்ஞான அடிப்படையோ அல்லது மரபணு உரிமைகோரலின் அடிப்படையோ இல்லை என்று ஸ்காட்லாந்தின் எம்.ஆர்.சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்கார் மெக்லீன் தெரிவிக்கின்றார்.

 ஸ்வாப் பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் பலவீனமடைந்துள்ளது என்று முடிவு செய்வது தவறானது, ஆனால் பிறழ்வுகளிலிருந்து வைரஸ் பலவீனமடைவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது, ஆனால் இதை கூறுவதற்கு முன்பு ஒரு ஆழமான ஆய்வு அவசியமானது என்று அவர் கூறுகிறார்.  

ஜாங்கெரில்லோவின் கூற்றை நிராகரித்துள்ள உல சுகாதார அமைப்பு, வைரஸ் திடீரென பலவீனமடைந்து விட்டதாக நம்பிக்கை பரவக்கூடாது என்றும் கூறுகிறது.

இத்தாலியில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பதும், இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டன என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை, இதனால்தான் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் பொருள் வைரஸ் பலவீனம் அடைந்துவிட்டது என்பதல்ல, சமூக விலகல் போன்ற பல காரணங்கள் உள்ளன. இதற்கிடையில் வைரஸ் பலவீனமாகிவிட்டதான கூற்றை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களை இத்தாலி அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

உடல் ரீதியான சமூக இடைவெளியை பராமரிப்பது, ஒன்றாக கூடுவதைத் தவிர்ப்பது, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவது, குறைவான நபர்களுடன் தொடர்பு கொள்வது போன்றவையே  தொற்றுநோய்களைக் குறைக்கும் என்று இத்தாலி அரசு வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்து வருவதாக  இத்தாலிய மருத்துவர் கூறியதை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவன வல்லுநர்களும் பல விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின்  தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் மற்றும் வைரஸ்கள் மற்றும் தொற்று நோய்கள் குறித்த பல வல்லுநர்கள், ஜாங்க்ரிலோவின் கருத்துக்கள் அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை என கூறி உள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் கணிசமாக மாறுகிறது என்பதைக் நிரூபிப்பதற்கான தரவு எதுவும் இல்லை, அதன் பரவுதல் வடிவத்தில் அல்லது அது ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தில். பரிமாற்றத்தின் அடிப்படையில், அது மாறவில்லை, தீவிரத்தன்மையின் அடிப்படையில், அது மாறவில்லை" என்று வான் கெர்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், தாம் கூறுவது சரிதான் என்பதில் சான் ரஃபேல் மருத்துவமனை உறுதியாக உள்ளது. மேலும் 200 நோயாளிகளின் அறிகுறிகளை ஆராய்ந்த பின்னர் வைரஸ் மிகவும் பலவீனமாகிவிட்டது என்று கூறலாம் என மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி ஆய்வகத்தின் இயக்குனர் மாசிமோ கிளெமென்டி கூறுகிறார்.  

ஜெனீவாவில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் மேனியோ பாசெட்டி சான் ரஃபேல், மருத்துவமனையின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது வைரஸின் சக்தி பலவீனமடைந்திருப்பதாகவும், தற்போதுள்ள கொரோனா வைரஸ் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.   

சான் ரஃபேல் மருத்துவமனையின் கூற்றுக்கு சில அறிவியல் அடிப்படைகள் உள்ளன. அதன்படி சில வைரஸ்கள் நீண்ட காலமாக உயிர் வாழும்போது தானாகவே பலவீனமடைந்துவிடுகின்றன என கூறி உள்ளார்.

Next Story