கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி


கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2020 10:10 AM GMT (Updated: 3 Jun 2020 11:31 AM GMT)

கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? என்ற சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீருடன் பேட்டி அளித்து உள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கருப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் இறப்பும் அது நிகழ்ந்த விதமும் உலக மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளன.

 'கலவரக்காரர்களை போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராணுவத்தை களமிறக்குவேன் ' என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்த பிறகும் , கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை. 

கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மட்டுமின்றி ஜார்ஜ் பிளாயிட்டுக்கு ஆதரவாக இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அங்கிருக்கும் அமெரிக்காவின் தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காரணம்... ஜார்ஜ் பிளாயிட்டின் கடைசி விநாடிகள் தொடர்பான வீடியோ  மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம். இந்த தாக்கத்தை ஏற்பட காரணமாக இருந்தவர்  17 வயது கருப்பின சிறுமி டார்னெல்லா ஃப்ரேஸர்.

கடந்த மே 25- ந் தேதி மின்னபொலிஸ் நகரில் பெட்டிக்கடை ஒன்றுக்கு சிகரெட் வாங்க சென்றார் ஜார்ஜ் பிளாயிட் . அதற்கு, பணமாக 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். போலி டாலர் என்று, நினைத்த கடைக்காரர் உடனடியாக போலீஸாருக்கு போன் செய்து விடுகிறார். அடுத்த விநாடியில்,  போலீஸ் அங்கே ஆஜர் . காரில் வந்த நான்கு போலீஸ்காரர்களில் ஒருவர், டெரக் சோவீன். காரை விட்டு இறங்கிய  வேகத்தில்  டெரன் சோவீன் , ஜார்ஜ் பிளாயிட்டை குப்புற படுக்க வைத்து  முழங்கையை பின்னால் கட்டி கழுத்தில் தன் முட்டியை வைத்து அழுத்துகிறார். ஜார்ஜ் பிளாயிட் ,  அந்த கருப்பினத்தவர் என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.  அந்த வெள்ளை போலீஸ் அதிகாரி தனது முட்டியை  கழுத்தில் இருந்து எடுக்கவே இல்லை.  அருகிலிருந்த மற்ற போலீஸ்காரர்களும் தடுக்கவில்லை. சுமார் 8 நிமிடம் 46 விநாடிகளில் ஜார்ஜ் பிளாயிட் தன் உயிரை இழந்து விட்டார்.

இந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக பதிவு செய்தவர் தான் டார்னெல்லா.  ஜார்ஜ் பிளாயிட் உயிரை இழக்கும் வீடியோவை  டார்னெல்லா சமூகவலைத்தளத்தில் வெளியிட இப்போது, அமெரிக்காவே பற்றி எரிகிறது. ஆனால், இணையத்தில்  டார்னெல்லாவை ஏராளமானோர் விமர்சனமும் செய்தனர். 'நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை' என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வி கணைகளை தொடுத்தனர்.

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நவ்திஸ் மீடியா வழியாக டார்னெல்லா, பதிலளித்துள்ளார். ''நான் ஒரு மைனர் பெண். அங்கே நடந்த சம்பங்களை பார்த்ததும் பயந்து விட்டேன். என்னால், அந்த போலீஸை எதிர்த்து போராடிவிட முடியுமென்று கருதுகிறீர்களா. ஜார்ஜ்  இறப்பதை நான் 5 அடி தொலைவிலிருந்து பார்த்தேன். அந்த தருணத்தை எப்படி உணர்வதென்றே எனக்கு தெரியவில்லை. மிக மோசமான சம்பவம் அது. என் நிலையில் இருந்து பார்த்தால்தான் அதை உணர முடியும் '' என்று பதிலளித்துள்ளார். ஜார்ஜ் பிளாயிட் மரணத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டங்களிலும் டார்னெல்லா ஃப்ரேஸர் கலந்து கொண்டுள்ளார்.


Next Story